சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.143.14 கோடி செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நிறுவப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலையில் இதே வளாகத்தில் காலியாக உள்ள பகுதியில் பி-பிளாக்கில் ரூ.200 கோடி மதிப்பில் 580 படுக்கைகளுடன் அடங்கிய ‘‘புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை’’ ஒன்றை தமிழக அரசு உத்தரவை ஏற்று பொதுப்பணித்துறையின் கட்டிடப்பிரிவினர் கட்டி முடித்துள்ளனர். மேலும் அதே வளாகத்தில் செயல்பட்டு வந்த ‘பாலர் அரங்கம்’, 1974-ம் ஆண்டு முதல் ‘கலைவாணர்’ அரங்கமாக செயல்பட்டு வந்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு அங்கு புதிய தலைமைச்செயலகம் கட்ட கூடுதலாக இடம் தேவைப்பட்டதால் கலைவாணர் அரங்கத்தை இடித்தது. அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இடிக்கப்பட்ட கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் புதிய கலையரங்கம் கட்டப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
அதனடிப்படையில் ரூ.61 கோடி செலவில் தரைதளம் மற்றும் ராட்சத தூண்களுடன் கலையரங்கம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள இடத்தில் 1.94 லட்சம் சதுர அடியில் கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது. தரை தளம் மற்றும் முதலாவது மாடி, 2-வது மாடி, 3-வது மாடிகள் கட்டப்பட்டு விட்டன. முதல் மற்றும் 2-வது தளத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையிலான ஆடிட்டோரியமும், 3-வது தளத்தில் 1,700 பேர் அமரும் வகையிலான பல்வகை பணிகளுக்கான மண்டப அறைகளும் கட்டப்பட்டு உள்ளன. இதுதவிர 2 சிறிய கூட்ட அறைகள், 2 சொகுசு அறைகள் மற்றும் தரைதளத்தில் செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி அறை, உணவு கூடமும் கட்டப்பட்டு உள்ளது.
முதன் முறையாக அரசு கட்டிடத்தில் 2 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரசு கட்டிடத்தில் இந்த வசதியை பெறும் முதல் கட்டிடம் என்ற பெருமையையும் கலையரங்கம் பெற்றுள்ளது. இதனுடன் 7 லிப்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மேல் கூறை உட்பட அனைத்து கட்டுமானப்பணிகளும் நவீன தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டு உள்ளது.
குறிப்பாக 110 அடி நீளத்தில் தூண்களே இல்லாத வகையில் கான்கிரீட் கூறை அமைக்கப்பட்டு உள்ளது. கலையரங்கத்தின் வளாகத்தில் பூங்காவும், 500 கார்கள் நிறுத்தும் இடங்களும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முற்றிலுமாக முடிந்த பிறகு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். கட்டிடம் செப்டம்பர் மாதம் திறக்க வாய்ப்பு உள்ளது
இவ்வாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary : New Auditorium will be opened in Government Omandurar garden.