கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களின் விடைத்தாள்களின் நகல்களை நேற்று முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை பத்து மணி முதல் வரலாறு, கணினி அறிவியல் போன்ற பாடங்களுக்கான விடைத்தாள்களையும் மேற்கண்ட அதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகலை பெற்ற பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று Application for Retotalling/Revaluation என்ற பகுதியை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 நகல்களை எடுத்து வரும் ஜூன் 1-ம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணமாகவே செலுத்த வேண்டும்.

மேலும், விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு தொடர்பாக மாணவர்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 8012594109, 8012594119, 8012594124, 8012594126 ஆகிய செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.