இந்திய அஞ்சல் துறை வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகள் செய்து தரவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கிகளில் தருவது போன்று ஏடிஎம் அட்டையை விநியோகம் செய்தது. இந்நிலையில் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில், ஒரே மாதத்தில் கூடுதலாக 5 ஆயிரம் ஏடிஎம் அட்டைகள் வழங்கவுள்ளதாக, இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் இதுவரை அண்ணாசாலை, மயிலாப்பூர், தி.நகர், பரங்கிமலை, தாம்பரம் ஆகிய 5 தலைமை அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை, சுமார் ஆயிரம் பேர் ஏடிஎம் அட்டைகளைப் பெற்று பயனடைந்து வரும் நிலையில் கூடுதலாக 5 ஆயிரம் பேர்களுக்கு ஏடிஎம் அட்டைகள் வழங்க சென்னை மண்டல அஞ்சல் மண்டலம் முடிவு செய்துள்ளது.
சென்னை நகரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய அஞ்சல் நிலையங்களிலும் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 15 ஏடிஎம் மையங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், தமிழக அஞ்சல் வட்டம் மேலும் கூடுதலாக 90 அஞ்சலக ஏடிஎம் மையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. அதில், 20 அஞ்சலக ஏடிஎம் மையங்கள் சென்னை நகர மண்டலத்துக்குள்பட்ட இடங்களில் அமைக்கப்படவுள்ளன. அஞ்சலக ஏடிஎம்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பைப் பொருத்து, அதிக அளவில் ஏடிஎம் அட்டைகளை வழங்க சென்னை நகர அஞ்சல் மண்டலம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறியதாவது: தமிழகத்தில் 15 முக்கிய அஞ்சல் நிலையங்களில் அஞ்சலக ஏடிஎம் சேவை செயல்பட்டு வருகிறது. சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில், தற்போது 5 இடங்களில் அஞ்சலக ஏடிஎம் மையங்கள் உள்ளன. சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 1,000 வாடிக்கையாளர்களுக்கு இதுவரை அஞ்சலகப் பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
அஞ்சலக ஏடிஎம் சேவையைப் பெற, சேமிப்புக் கணக்கில் முதலில் ரூ. 5,000 இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ரூ. 500-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆகையால், புதிதாக ஏடிஎம் அட்டைகள் பெற அதிகம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக 20 அஞ்சலக ஏடிஎம் மையங்கள் சென்னை மண்டலத்தில் திறக்கப்படவுள்ளன. மேலும், சென்னை மண்டலத்தில் தற்போதுள்ள 5 ஏடிஎம் மையங்களைக் கணக்கில் கொண்டு, ஒரு மையத்துக்கு தலா ஆயிரம் பற்று அட்டைகள் என 5,000 பற்று அட்டைகளை வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
English Summary : Minimum Balance has been reduced from Rs.5000 to Rs.500 to get Post Office ATM card.