வருமான வரியை தாக்கல் செய்ய கடைசி தேதி நெருங்கி வருவதால் கடைசி நேரத்தில் வருமான வரி கட்ட வருபவர்களின் கூட்டத்தை சமாளிக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் இன்று முதல் சிறப்பு கவுண்டர்களை திறக்க வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் எம்.மதிவாணன் உத்தரவுட்டுள்ளார். இதுகுறித்து வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் எம்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் வசதிக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 31-ந் தேதி வரையிலான 5 நாட்கள் சிறப்பு ‘கவுண்ட்டர்கள்’ அமைக்கப்பட உள்ளது.

இந்த கவுண்ட்டர்களில் சென்னை வருமான வரித்துறை அலுவலக எல்லைக்கு உட்பட்டவர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வரி தாக்கல் செய்யலாம். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் இந்த சிறப்பு கவுண்டர் செயல்படும். ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வரி செலுத்தத்தக்க வருமானம் உடைய ஓய்வூதியதாரர்களும் தாக்கல் செய்யலாம்.

தாம்பரம் எல்லைக்கு உட்பட்டவர்கள் தாம்பரத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வரி தாக்கல் செய்யலாம். வருமான வரி எந்த அலுவலகத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்ற விவரம் www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். வரி தாக்கல் செய்பவர்கள் ‘பான்’ கார்டு, வங்கி கணக்கு எண், ‘ஐ.எப்.எஸ்.சி.’ எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

ரூ.5 லட்சத்துக்கும் அதிக வருமானம் உடையவர்கள் மற்றும் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை திரும்ப பெறுவதற்கு (ரீபண்டு) விண்ணப்பிக்க 2014-15 நிதி ஆண்டு மற்றும் 2015 கணக்கீட்டு ஆண்டில் மின்னணு முறையிலேயே பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

அதே சமயத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. அவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கவுண்ட்டர்களில் சமர்ப்பிக்கலாம். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்படும்.

உதவி மேஜைகள், உதவி வருமான வரி கணக்கு தயாரிப்பாளர்கள், ‘யூ.டி.ஐ.’ கவுண்ட்டர்கள், வரி செலுத்துவதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி விரிவாக்கப்பட்ட கவுண்ட்டர்கள், ‘பான்’ கார்டு சரிபார்க்கும் கவுண்ட்டர்கள் செயல்படும்.

வரி செலுத்துவது தொடர்பான மேலும் விவரங்கள், தகவல்களை வருமான வரித்துறை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் 044-28338314 என்ற எண்ணில் தொடர்புகொண்டு கேட்கலாம்.

English Summary : Special counters has been placed to pay income tax in Chennai.