நேற்று வெளியான சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் அகில இந்திய அளவில் சென்னை மாணவர் எஸ்.நிஷோக் குமார் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இவர் இந்தத் தேர்வில் 500-க்கு 494 மதிப்பெண் பெற்றுள்ளார். கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் தலா 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 97, கணினி அறிவியலில் 100 மதிப்பெண்களும் அவர் பெற்றுள்ளார்.
சென்னை மாணவர் நிஷோக் குமாருடன் மேலும் 2 மாணவர்கள் 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை முகப்பேரில் உள்ள டிஏவி சீனியர் செகண்டரி மேல்நிலைப் பள்ளியில் படித்த சென்னை மாணவர் நிஷோக் குமார் நேற்று தேர்வு முடிவு வெளியானதும் தான் அகில இந்திய அளவில் மூன்றாவது இடம் பெற்றுள்ளதை அறிந்ததும் பெரும் ஆச்சரியம் அடைந்ததாக கூறியுள்ளார். நிஷோக் குமார் மேலும் கூறியபோது, “இந்த அளவு மதிப்பெண்களை பெறுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த மதிப்பெண்கள் ஆச்சரியத்தை அளிக்கிறது. கணிதப் பாடத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்றுக் கடினமாக இருந்தாலும், இதில் 99 மதிப்பெண்கள் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விருப்பம் உள்ளதாக கூறிய நிஷோக் குமார், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாக கூறினார். மேலும் தனக்கு இசையிலும் மிகுந்த ஆர்வமுண்டு என்றும் லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் எலெக்ட்ரானிக் கீபோர்டில் 8 கிரேடுகளை முடித்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிஷோக் குமாரின் தந்தை டி.என்.சுந்தரேசன் மற்றும் தாயார் எஸ்.சிவசுந்தரி ஆகிய இருவரும் சிவில் என்ஜீனியர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ள இந்த மாணவர் சென்னை மண்டலத்திலேயே முதலிடம் பெற்றுள்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Chennai Student S.Nishok Kumar wishes to study B.Tech in IIT after getting State first in +2 CBSE result.