வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வாக்காளர் அடையாள அட்டை செல்லாது என நேற்று திடீரென வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ, வாக்களிக்கவோ ஆதார் எண் அவசியமில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா விளக்கம் அளித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதார் எண் அவசியம் என சென்னை மாநகராட்சி அறிவித்ததாக நேற்று செய்திகள் வெளியாகின. இதற்கு விளக்கமளித்து சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதார் எண்ணை அளிப்பது வாக்காளர்களின் விருப்ப அடிப்படையிலானது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ஏற்கெனவே விளக்கமளித்துள்ளது. ஆதார் எண் இணைக்காத காரணத்தால் எந்தவொரு வாக்காளருக்கும் தேர்தல் தொடர்பான எந்த விஷயங்களும் மறுக்கப்படாது. ஆதார் எண் அளிக்காத காரணத்தால், புதிதாக பெயர் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு வாக்காளரின் பெயரை நீக்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாது.

மேலும் ஆதார் எண் பெறப்பட்டுள்ள நிலையில் அது, வாக்காளர் பட்டியல், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு ஆகியவற்றிலோ, பொது மக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்திலோ, மக்களுடன் பகிரும் வகையிலோ வெளியிடப்பட மாட்டாது. தமிழகத்தில் மொத்தம் 5.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 5.54 கோடி வாக்காளர்களின் (98.72 சதவீதம்) விவரங்கள் சேகரிக்கப்பட்டு, 4.97 கோடி பேரின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் விவரங்களோடு, ஆதார் விவரங்களை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்காளர்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பெறும் பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக மேற்கொண்டனர். மேலும், இந்தப் பணிக்காகவும், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட படிவங்களைப் பெறவும் நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை 13 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றைத் தீர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன

இவ்வாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English Summary : Chief Electoral Officer Sandeep Saxena lists out the need to add Aadhaar number into their respective voter ID.