ரூ. 1.2 லட்சம் கோடி! மின்சார வாகனங்களுக்கு மாறினால் சேமிக்கலாம்கொள்கை உருவாக்க, ‘நிடி ஆயோக்’ வலியுறுத்தல்
புதுடில்லி: ‘நாட்டில் உள்ள இரு சக்கர வாகனங்களை, மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றினால், ஆண்டுக்கு, 1.2 லட்சம் கோடி ரூபாய் சேமிக்க முடியும்’ என, ‘நிடி ஆயோக்’ கூறியுள்ளது.
முன்னதாக ‘மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள நிலையில், இந்த அறிவிப்பை நிடி ஆயோக்,வெளியிட்டுள்ளது.
மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், நிடி ஆயோக் அமைப்பு, ‘மாசில்லா வாகனங்கள் – கொள்கை வரையறையை நோக்கி’ என்ற தலைப்பில், ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது. டில்லியில், நேற்று முன்தினம் நடந்த, சர்வதேச போக்குவரத்து மாநாட்டில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டிய அவசியம் குறித்தும், அதற்காக உருவாக்க வேண்டிய கொள்கை குறித்தும் விரிவாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக, சர்வதேச போக்குவரத்து மாநாட்டில் பேசிய, பிரதமர் நரேந்திர மோடி, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டினார்.
அவர் பேசுகையில்: பூமி வெப்பமடைவதை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில், வாகன மாசைக் குறைப்பது முக்கியமானது. அதன்படி, மாசு ஏற்படுத்தாத, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டும். இந்தத் துறையில், மிகப் பெரிய வாய்ப்பு உள்ளதால், அதிகமான முதலீடுகளை செய்ய, முதலீட்டாளர்கள் முன் வர வேண்டும். இவ்வாறு, மோடி பேசினார்.
இந்நிலையில், நிடி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெட்ரோல்மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க, முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன் மூலம், நமக்கு மிகப் பெரிய பலன்கள் கிடைக்கும். மின்சார வாகனங்களால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது. இதனால், காற்று மாசு குறையும். தற்போது, நம் நாடு, பெட்ரோல், டீசலை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. மின்சாரத்துக்கு மாறினால், இவற்றை இறக்குமதி செய்வதற்கான செலவும், மிகப் பெரிய அளவில் குறையும். நாட்டில் தற்போது, 17 கோடி இரு சக்கர வாகனங்கள் உள்ளன.
ஒரு வாகனத்துக்கு, ஒரு ஆண்டில், 200 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு, 3,400 கோடி லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70 ரூபாயாக வைத்துக் கொண்டால், 2.4 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில், 50 சதவீதம் வரிகள் என்று வைத்துக் கொண்டாலும், 1.2 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு மின்சார வாகனங்களுக்கு மாறுவதை, படிப்படியாக மேற்கொண்டால், அடுத்த, ஏழு ஆண்டுகளுக்குள், அனைத்து இரண்டு சக்கர வாகனங்களையும், மின்சார வாகனங்களாக மாற்ற முடியும். இந்தப் புதிய தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு, விரிவான, திட்டமிட்ட, உறுதியான கொள்கை தேவை. பல்வேறு நாடுகள், மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றன. இந்த வகையில், சர்வதேச சந்தையிலும் நம் நிறுவனங்கள் போட்டியிட முடியும். மாசில்லாத வாகனங்களுக்கு மாறுவதன் மூலம், சர்வதேச நாடுகளுக்கு முன்னோடியாகவும் நாம் இருக்க முடியும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம், ‘மின்சார வாகனத்துக்கு மாறும் அரசின் முயற்சிக்கு, அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்’ என, சுவிட்சர்லாந்தில் தலைமையிடம் உள்ள, ஏ.பி.பி., நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறையில் முன்னிலையில் இருக்கும், ஏ.பி.பி., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: சர்வதேச போக்குவரத்து மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடியை, ஏ.பி.பி., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, உல்ரிச் ஸ்பீசோபர் சந்தித்து பேசினார். அப்போது, மின்சார வாகனங்களுக்கு மாறும் அரசின் முயற்சிகளுக்கு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக, உல்ரிச் கூறியுள்ளார். வரும், 2022க்குள், 227 ஜிகாவாட் திறனுள்ள, மாசில்லாத, மாற்று மின்சாரத்தை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு உதவுவது குறித்தும், இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. என அதில் கூறப்பட்டுள்ளது