சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை மிரட்டிய ‘மிக்ஜாம்’ தீவிர புயல், தெற்கு ஆந்திராவின் பாபட்லா அருகே நேற்று மாலை கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக அதிகனமழை கொட்டி தீர்த்த நிலையில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 34 செமீ மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் கடந்த 4-ம் தேதி நிலவிய ‘மிக்ஜாம்’ தீவிர புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 4-ம் தேதி அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதனால், இப்பகுதிகள் ஸ்தம்பித்தன.
நேற்று (டிசம்பர் 5) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 34 செ.மீ., ஆவடி 28, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் 27, சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம் 24, மாமல்லபுரம், சென்னை ஐஸ் ஹவுஸ் 22, ராயபுரம், அடையாறு, திரு.வி.க நகர், கோடம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் 21, சோழிங்கநல்லூர், தரமணி, மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், திருவூர் 19 செ.மீ. என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தெற்கு ஆந்திராவின் பாபட்லா அருகே ‘மிக்ஜாம்’ புயல் நேற்று மாலை கரையை கடந்தது. அப்போது, அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது.
இன்றும், நாளையும் (டிசம்பர் 6, 7) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.