சென்னை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்து வரும் மெரீனா கடற்கரைப் பகுதியில் பறவைகளால் சுற்றுச்சூழலியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் விலங்குகள், வீடுகளில் வளர்க்கப்படும் பிராணிகள், மற்றும் பறவையினங்கள் ஆகியவற்றால் சுற்றுச்சூழலியல் மாற்றத்தினை வெளிப்படுத்தும் காரணிகளாக உள்ளன. இந்நிலையில், விலங்கினங்கள், பறவையினங்களுக்கு உணவு, குடிநீர் வழங்கி பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், வீடுகள், வீட்டுத்தோட்டங்களில் நீர் கிண்ணங்கள் வைத்து தாகம் தணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக, சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் ஆகியவை இணைந்து, நீர் கிண்ணம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. காவல் துறை துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன், கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி, திரைப்பட நடிகர் ஹரீஷ் உத்தமன், திரைப்பட பாடகி உஜ்ஜையினி ராய் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இதில், சமூக ஆர்வலர்கள், பிஎஃப்சிஐ வளர்ப்பு பிராணிகள் பாதுகாப்பு தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காவல் துறை துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வளர்ப்பு பிராணிகள், பறவையினங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு மீதமுள்ள உணவுகள், வீணாகும் காய்கறி கழிவுகளை விலங்கினங்கள் உணவாகச் சாப்பிடுகின்றன. மேலும் சிலர் வீடுகளில் பறவையினங்களுக்கு உணவு, தானியங்கள் கொடுத்து வருகின்றனர். விலங்கினங்கள், பறவையினங்கள் சூழலியல் மாற்றுத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன.
மெரீனா கடற்கரைக்கு தினசரி வந்துசெல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கொண்டு வரும் உணவுப்பண்டங்களை ஆங்காங்கே விட்டுச் செல்வதால் இவற்றை உண்பதற்கு இரவு நேரங்களில் எலிகள் வருவதாகவும், இந்த எலிகளை உண்பதற்கு ஆந்தைகள் வருவதால் சமீபகாலமாக கண்காணிக்கப்பட்டதில்
மெரீனாவில் இதுபோன்ற புதுவிதமான சூழலியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் கொண்டு வரும் உணவுப்பொருட்கள் மற்றும் அவற்றின் கழிவுகளை ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகளில் போடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கோடையில் வளர்ப்பு பிராணிகள், பறவைகளின் தாகம் தணிக்க சென்னைவாசிகள் அவர்களது வீடுகள், பூங்காக்களில் நீர்க் கிண்ணங்களை அமைப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம், காகம், குருவி, கிளி, புறா உள்ளிட்ட பறவைகள், பசுக்கள், நாய், பூனை, அணில் உள்ளிட்ட பிராணிகளின் தாகத்தைத் தணிக்க உதவ முடியும். இதேபோல், வனப்பகுதிகளிலும் விலங்கினங்கள், பறவையினங்களுக்கு தாகத்தை தணிக்க நீர் வழங்கும் வசதிகளை வனத் துறையினர் அதிகரிக்க வேண்டும் இவ்வாறு வி.பாலகிருஷ்ணன் பேசினார்.
English Summary: Change the Environment in Chennai Marina. Police commissioner.