twitterதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு அக்கறை எடுத்து கொள்கின்றதோ அதே அளவுக்கு வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற நோக்கத்தை முன்வைத்தும் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகின்றது. திரைப்பட நடிகர்களின் குறும்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றோடு இந்த விழிப்புணர்வுக்கு பெரும் உதவியாக இருப்பது சமூக வலைத்தளங்கள்தான் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் பேசியதாவது:

தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற நோக்கத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டுவிட்டரில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டுவிட்டர் நிறுவனத்தின் தேசிய பொறுப்பாளர் ரெவலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி ஓட்டுப்பதிவு தினத்தன்று டுவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நினைவூட்டல் செய்தி அனுப்பப்படும். யாரெல்லாம் நான் வாக்குப்பதிவு செய்து விட்டோம் என்று டுவிட்டரில் பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்கள் கையெழுத்து போஸ்டர்கள் அனுப்பப்படும். வாக்காளர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு 100 சதவீத வாக்கு பதிவை அடைய இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் தேசிய பொறுப்பாளர் ரெவல் கூறியதாவது: இந்த ஒப்பந்தத்தின்படி தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வு படங்கள் டுவிட்டரில் பதியேற்றம் செய்யப்படும். பொதுவாக டுவிட்டரில் பதியேற்றம் செய்ய குறிப்பிட்ட நேரம் தரப்படும். ஆனால் தேர்தல் விழிப்புணர்வு படங்களை பதியேற்றத்தை எந்த நேரத்திலும் செய்ய அனுமதி உள்ளோம் என்று கூறினார்.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் டுவிட்டர் பயனாளிகள் கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் இந்த புதிய முயற்சியால் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அதிகளவில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Election Commission Treaty with twitter.