தேசிய அளவில் பிரிட்டன் விவாத போட்டி ஒன்றை பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தி வருகிறது. இந்த விவாத போட்டியில் சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று சென்னை நகருக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.
பிரிட்டன் விவாத போட்டிக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 26 கல்லூரிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் இறுதிச் சுற்று போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இந்த இறுதிச் சுற்று போட்டியில் சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இந்திய கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றல், தகவல் தொடர்பு திறன்களை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிட்டன் உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கல்லூரிகளுக்கு இடையேயான பிரிட்டன் விவாதப் போட்டியை பிரிட்டன் தூதரகத்துடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அந்த வகையில் இவ்வருட விவாத போட்டி தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
முதலில் மாநில அளவில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு, பின்னர் தேசிய அளவில் புதுடில்லியில் இறுதிப் போட்டி நடத்தப்படும். தேசிய அளவிலான இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் 2 அணிகளுக்கு பிரிட்டனில் ஒரு வார கால கல்விச் சுற்றுலா திட்டம் பரிசாக வழங்கப்படும். அவ்வாறு பிரிட்டனுக்கு அனைத்துச் செல்லப்படும் மாணவர்கள் பார்கிலேஸ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியை காண அனுமதிக்கப்படுவதோடு, வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காணுதல், கல்வி நிறுவனங்கள், கலாசார நிகழ்வுகளைக் கண்டுகளிக்கவும், பிரிட்டன் கல்லூரி மாணவர்களைச் சந்திக்கவும் அனுமதிக்கப்படுவர்.
2015-ஆம் ஆண்டுக்கான இந்தப் போட்டியின் மாநில அளவிலான இறுதிச் சுற்றுகள் புவனேஸ்வரம், பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டன. தமிழகத்துக்கான இறுதிச் சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 26 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்தக் கல்லூரி அணி, மற்ற நகரங்களில் வெற்றிபெற்ற அணிகளுடன் டில்லியில் 2016 ஜனவரி மாதம் நடத்தப்படும் தேசிய அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றது. சென்னை நகருக்கு பெருமை தேடித்தந்த இந்த கல்லூரியின் அணிக்கு பிரிட்டன் துணைத் தூதரக அதிகாரி பாரத் ஜோஷி பாராட்டு தெரிவித்தார்.
English Summary : Chennai M.O.P. Vaishnav College for Women college students selected in Britain debate competition.