சென்னை: சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வணிக வளாகம் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிநீர் லாரிகள் ஸ்டிரைக்கால் சென்னையின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் லாரிகள் ஸ்டிரைக்கால் சென்னையின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பராமரிப்பு பணி காரணமாக இன்று, வணிக வளாகம் மூடப்படுவதாக போர்டு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டபோது, தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகிகளிடம் கேட்டபோது, இது மாதா மாதம் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்கான மூடல்தான். நாளை திறக்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள்.
எக்ஸ்பிரஸ் அவென்யூ முற்றிலும் தனியாரிடமிருந்து தண்ணீர் வாங்கி உபயோகித்து வரும் ஒரு வணிக நிறுவனம். இந்த வணிக வளாகத்துக்கு ஒரு நாளில் ஆயிரக்கணக்கானக்கான மக்கள் வந்துசெல்வர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்பதற்காக மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்றைய தினம் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள திரையரங்கங்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கும் எனவும் கூறபடுகிறது.