சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் இயங்க தயாராக உள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவடைந்தவுடன் சென்னை மக்கள் முதன்முதலாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் அனுபவத்தை பெற உள்ளனர். மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில்களை விட கூடுதல் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தற்போது பார்ப்போம்.
1. சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் 2 லெவல்களில் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் அமைந்துள்ள டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்து விட்டு, முதல் தளத்திற்கு பயணிகள் செல்ல வேண்டும். டிக்கெட்டை பிளாட்பார நுழைவு வாசலில் காட்டினால்தான் கதவு திறக்கும். ரெயில் வந்தவுடன் பயணிகள் உடனே ஏற வேண்டும். பயணிகள் ஏறியவுடன் தானியங்கி நவீன கதவுகள் மூடிக்கொள்ளும்.
2. மெட்ரோ ரெயில் நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்க முடியாது. ஒரு ரெயிலில் ஏறிச் செல்லவில்லை என்றால் அடுத்த ரெயிலில் கட்டாயம் பயணம் செய்ய வேண்டும்.
3. அதிக நேரம் ரெயில் நிலையத்தில் காத்திருந்தால் வெளியே செல்லும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். நிலையதிற்குள் வரும் நேரம், வெளியே செல்லும் நேரம் ஆகியவை கணக்கிட்டு இந்த கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
4. ஒருமுறை சென்றுவர டோக்கன் முறை செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான கட்டணத்தை கொடுத்து டோக்கன் பெற்றுக் கொண்டு பயணம் செய்யலாம். எடுத்துக்காட்டாக ஒருவர் வேலைக்கு செல்பவராக இருந்தால் காலையில் சென்றுவிட்டு மாலையில் திரும்பும் போது அந்த டோக்கனை நிலையத்தில் உள்ள பெட்டியில் போட்டு விட்டு செல்ல வேண்டும். மேலும் சென்னை நகரப் பேருந்துகளில் இருப்பது போல் ஒருநாள் பயணம், ஒரு மாதம் பயணம் என பல்வேறு முறைகளில் டிக்கெட் வழங்க திட்டமிடப்படுகிறது.
5. மெட்ரோ ரெயில் 80 கி.மீ. முதல் 90 கீ.மி. வேகத்தில் செல்லும். ஒரு ரெயிலில் 1276 பேர் பயணம் செய்யலாம். 176 பேர் உட்கார்ந்தும் மீதமுள்ள பயணிகள் நின்று கொண்டும் செல்ல முடியும்.
6. பயணத்தின் போது ஏதேனும் சேவை குறைபாடுகள் தென்பட்டால் ரெயில் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அனைத்து பெட்டிகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
7. பெண்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வகுப்பு பெட்டிகள் உள்ளன. ரெயிலின் செயல்பாட்டை அறையில் இருந்தபடியே டிரைவர் கண்காணிக்கும் வசதி உள்ளது.
English Summary : Passengers rules for travelling in Metro Rail after opening.