பிளஸ் 2 முடித்து எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக சென்னை வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இங்குள்ள அரங்குகளில் பெற்றோர், மாணவர்களுக்காக நவீன வசதிகளைச் செய்யும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்காக செய்யப்பட்ட முன்னேற்பாடுகளை நேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறையின் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் ஆகியோர் பார்வையிட்டனர்.

கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரி, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ஆகியவற்றில் நிரப்பப்படும் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இடங்கள், காலியிடங்கள் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் 12 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் மாணவ, மாணவியர் டிடி எடுக்கவும், பணம் செலுத்தவும் தற்காலிகமாக கணினிமயமாக்கப்பட்ட வங்கி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரே சமயத்தில் 5 மாணவர்கள் அமர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்ய வசதியாக 5 கணினிகளும் கலந்தாய்வுக் கூட்டத்தில் இடம்பெறும். மேலும் மாணவர்கள்-பெற்றோர் அமர்வதற்கு வசதியாக சிறப்பு மருத்துவமனையின் வெளிப்புறப் பகுதியில் மிகப் பெரிய பந்தல், குடிநீர் வசதி, சிற்றுண்டி வசதி, கழிப்பறை வசதி ஆகியவையும் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அருகே சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி அதிகளவு ஏற்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள்-பெற்றோர் வசதிக்காகவும் இந்த ஆண்டுக்கான ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள அரங்குகளில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

English Summary : 1st Stage counseling for Students who applied for MBBS will starts tomorrow at Omandurar Campus.