சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் இன்று முதல் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கின்றார்.
ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 2-வது வழித்தடமான சென்னை சென்டிரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சுரங்கப்பாதையில் 16 ரெயில் நிலையங்களும், உயர்மட்ட பாதையில் 16 ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முதல் கட்டமாக முற்றிலும் பணி முடிந்துள்ள கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூர பாதையை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் ஆய்வு செய்து, பயணிகள் சேவையை தொடங்குவதற்கான சான்றிதழை ஏற்கனவே வழங்கியுள்ளார்.
இதையடுத்து ஆலந்தூர்-கோயம்பேடு இடையே இன்று முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையை தொடங்கி வைக்கிறார்.
அத்துடன் அந்த வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் பணிமனை ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இதன்மூலம் சென்னை நகர மக்களின் நீண்டநாள் கனவு இன்று நனவாகிறது.
இரயில் போக்குவரத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததும் முதல் மெட்ரோ ரெயில் ஆலந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோயம்பேடுக்கு செல்லும், அதேபோன்று கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் நோக்கி மற்றொரு மெட்ரோ ரெயில் புறப்பட்டு செல்லும்.
நாள்தோறும் காலை 5 மணியில் இருந்து இரவு 12 மணி வரை தொடர்ந்து 19 மணி நேரம் மெட்ரோ ரெயில் இயங்கும். அலுவலக நேரங்களில் 4.5 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும், மற்ற நேரங்களில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும் இயக்கப்படும். பயணிகளின் கூட்டத்தை பொறுத்து 2.5 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலை இயக்கவும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கான கட்டண விவரம் இன்று காலை அனைத்து ரெயில் நிலையங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் பிரமாண்டமான முறையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 2 ஏ.டி.எம். எந்திரங்கள், குடிநீர் வசதி, இருக்கை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
தொடக்க விழாவையொட்டி ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு ஆகிய ரெயில் நிலையங்கள் அலங்கார மின்விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
விழா ஏற்பாடுகளை அரசு தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சல், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
English Summary : Chennai Metro Rail project will starts today afternoon between Koyambedu to Alandur.