மாதவரம் – சிறுசேரி சிப்காட்வரையிலான 3-வது வழித்தடத்தில், சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை (நுங்கம்பாக்கம்) நோக்கி மெட்ரோ ரயில்சுரங்கப் பாதைக்கான முதல்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்,3 வழித்தடங்களில் 116.1 கி.மீ.தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம். 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து, 2.8 கி.மீ. தொலைவில் சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்க ஆரம்பகட்டப் பணி அண்மையில் தொடங்கியது. தற்போது, இந்தப் பணி சுறுசுறுப்படைந்து உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்காக, ‘சிறுவாணி’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இயந்திரத்தை பயன்படுத்தி, 205 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்படும். சேத்துப்பட்டில் 22 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இது ஸ்டெர்லிங் சாலை சந்திப்பை நோக்கி செல்லும் போது, சுரங்கப்பாதையின் ஆழம் 15 மீட்டராக குறையும்.
சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகளை அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதுதவிர, ஸ்டெர்லிங்சாலை பகுதியில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கவுள்ள நிலையில், அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன என அவர்கள் கூறினர்.