கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சி.ஏ. இறுதி தேர்வில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

சி.ஏ. என்று கூறப்படும் கணக்கு தணிக்கையாளர் படிப்புக்கான தேர்வு இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வருகிறது. சிஏ இறுதி தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவுகள் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, சென்னையைச் சேர்ந்த ஆர். ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளார். இவர் 800 மதிப்பெண்ணுக்கு 595 மதிப்பெண் அதாவது 74.38 சதவீத மதிப்பெண்ணை பெற்றுள்ளார். அவரை அடுத்து ஆந்திரபிரதேச மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த நகோலு மோகன் குமார் என்பவர் 800-க்கு 572 மதிப்பெண் எடுத்து 2ஆம் இடத்தையும், கொல்கத்தாவைச் சேர்ந்த அவினாஷ் சஞ்செட்டி 800-க்கு 566 மதிப்பெண் எடுத்து 3ஆம் இடத்தையும் பிடித்தனர்.

அகில இந்திய அளவில் தொகுதி-1 இறுதி தேர்வு எழுதிய 77,442 பேரில் 9,764 பேரும், அதேபோல், தொகுதி-2 இறுதி தேர்வெழுதிய 75,774 பேரில் 9,084 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொகுதி-1, தொகுதி-2 இரு இறுதி தேர்வுகளையும் சேர்த்து எழுதிய 42,469 பேரில் 2,440 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

மேலும், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சிஏ படிப்புக்கான முதல்கட்ட தேர்வான பொது தகுதி தேர்வை (Common Proficiency Test-CPT) 99,077 பேர் எழுதினர். அவர்களில் 34,129 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

English Summary: Chennai Student got first place in India level CA.