சென்னை காவல்துறையில் அவ்வப்போது இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 108 காவல்துறாஇ ஆய்வாளர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்களாக (டி.எஸ்.பி) பதவி உயர்வு அளிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் இருந்து வெளிவந்த செய்தி பின்வருமாறு:  காவல் துறையில் கடந்த 1987, 1996-ஆம் ஆண்டுகளில் உதவி ஆய்வாளர்களாக பணிக்கு சேர்ந்தவர்கள், காவல் ஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டே காவல் துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். ஆனால், நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் தமிழக அரசின் உள்துறை 108 காவல் ஆய்வாளர்கள் காவல் துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவு வெளியிட்டது. இதன் அடுத்தக் கட்டமாக பதவி உயர்வு வழங்கப்பட்ட 108 காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் பணி நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா உத்தரவு வெளியிட்டார். பதவி உயர்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் புதிய பொறுப்பை ஓரிரு நாள்களில் ஏற்பார்கள் என கூறப்படுகிறது.

English summary: 108 Police Inspectors are promoted as DSP’s in Chennai.