சென்னை உள்பட தமிழகத்தில் இருந்து வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பேரூர் என்ற பகுதியில் விரைவில் அமைக்கப்படவுள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்துக்கு ஜப்பான் நாடு நிதி உதவி வழங்கவுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய ஜப்பான் நிதி நிறுவன ஆய்வுக் குழு சமீபத்தில் சென்னை வந்து ஆய்வு செய்துள்ளது.

சென்னை நகரின் விரிவாக்கம், பெருகிவரும் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பேரூர் பகுதியில் தினமும் 400 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் திட்டம் ஒன்றை அறிவித்தார். இந்தப் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை ரூ. 4,070 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறைக்குக்கு, மத்திய அரசு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் மூலம் பரிந்துரை செய்தது. இந்தத் திட்டத்துக்கான நிதியுதவியைப் பெற்றுத் தர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு அமைப்பு ஏற்கெனவே அனுப்பப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து இந்தத் திட்டத்துக்காக நிதியுதவி விரைவில் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வுக் குழு ஒன்றை கடந்த 12-ஆம் தேதி அனுப்பியுள்ளது. குழு தலைவர், சிறப்பு நிபுணர்கள் உள்பட 14 பேர் அடங்கிய இந்தக் குழு சென்னையில் தங்கி இந்தத் திட்டத்துக்கான ஆவணங்களைச் சரிபார்த்தல், நிதியுதவி வழங்குதல் குறித்து முடிவு செய்யவுள்ளது.

பேரூர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிறுவப்படவுள்ளது. பணி ஆணை வழங்கிய 24 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளில் உள்ள 23 லட்சம் பேர் பயனடைவார்கள்.

English Summary: New Plant for Desalination of Sea Water in ECR, Japan supports financially.