வங்கிகளை போலவே இந்தியா முழுவதிலும் உள்ள அஞ்சல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த வங்கிச் சேவை என்று கூறப்படும் “கோர் பேங்கிங் (Core Banking Solution) வசதிக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் மட்டும் இதுவரை 512 அஞ்சலகங்களில் கோர் பேங்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
அஞ்சல் துறையில், “கோர் பேங்கிங்’ வசதியை ஏற்படுத்த “எங்கேயும், எப்போதும்’ என்ற பெயரில் மத்திய அரசு ஒரு திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு கடந்த 2013ஆம் ஆண்டில் டிசம்பர் 16ஆம் தேதி, நாட்டிலேயே முதல் முறையாக சென்னை கிரீம்ஸ் சாலை அஞ்சல் நிலையம் “கோர் பேங்கிங்’ வசதிக்கு மாற்றப்பட்டது.
“கோர் பேங்கிங்’ வசதிக்கு மாறும் அஞ்சலகங்களில், எங்கிருந்தும் பணப் பரிமாற்றம் உள்பட பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்கள் எளிதில் பெற முடியும். சி.பி.எஸ், திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1,000 அஞ்சலகங்களுக்கு மேல் கோர் பேங்கிங் வசதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில், அண்ணா சாலை, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை வடக்கு, தெற்கு உள்ளிட்ட 12 கோட்டங்கள் உள்ளன. இவற்றின் கீழுள்ள 572 அஞ்சலகங்களில், டிசம்பர் 31-ஆம் தேதி வரை 512 அஞ்சலகங்கள் கோர் பேங்கிங் வசதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள 60 அஞ்சலகங்களும் சி.பி.எஸ். வசதிக்கு மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும். தற்போது, சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 8 தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்கள் (ஏ.டி.எம்) செயல்பட்டு வருகின்றன என்று கூறினார்.
English Summary: Core Banking facility in Chennai Zone Post Office.