central1416சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்சல் இறக்கும் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ரயில்களில் இருந்து பார்சல் இறக்கப்படவில்லை. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பொதுவாக ரயில்களில் பார்சல் ஏற்றி இறக்குவதற்கு டெண்டர் விடப்பட்டு, டெண்டர் எடுத்தவர்கள்தான் இந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கூலி வழங்குவது வழக்கம். ஆனால் பார்சல் இறக்கும் தொழிலாளர்கள் பார்சல் வரும் ஏஜென்சிகளிடம் கூலி கேட்டதால் பிரச்சினை ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் சென்னை சென்ட்ரலுக்கு பிற நகரங்களில் இருந்து வந்த ரெயில்களில் இருந்து இரண்டு நாட்களாக பார்சல்கள் இறக்காமலும், ஏற்றாமலும் உள்ளது. இந்நிலையில் ஹவுராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த ரயிலில், மீன் கூடைகள் இறக்கப்படாமல் அப்படியே திரும்பி சென்றன. இதேபோல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலையில் வந்த மும்பை ரெயில், ஐதராபாத், சார்மினார், பினாக்கினி உள்ளிட்ட பல ரயில்களில் இருந்தும் பார்சல்கள் இறக்கப்படவில்லை. இதனால் அந்த பெட்டிகள் பார்சலுடன் யார்டுக்கு சென்றுவிட்டன.

பார்சல்கள் சென்னையில் உள்ள ஏஜென்சிகளுக்கு கிடைக்காததால் அவர்கள் நேற்று காலை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள பார்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீன் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த பொருட்கள் ரெயிலில் தேங்கி கிடப்பதால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் டெண்டர் எடுத்துள்ள நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

English Summary:Parcel Unload Staff Struggle in Chennai Central Railway Station.