மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடப்பு ஆண்டில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்வுக்கான தேதியை இன்று முடிவு செய்யப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 2013ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் இந்த அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்துவதற்கான மருத்துவக் கவுன்சிலின் உத்தரவு செல்லாது என்று கடந்த 2013ஆம் ஆண்டு இடைக்காலத் தடை விதித்தது.
பொது நுழைவுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. இந்த இடைக்கால தடையை எதிர்த்து மத்திய அரசும், மருத்துவக் கவுன்சிலும் சுப்ரீம் கோர்டில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தன. இந்த சீராய்வு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கான இடைக்காலத் தடையை ரத்து செய்து, பொதுநுழைவுத்தேர்வு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன, இந்நிலையில் நேற்று மருத்துவ படிப்புகளுக்கு நடப்பு ஆண்டில் கட்டாயம் நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும், நுழைவுத்தேர்வுக்கான தேதியை இன்று முடிவு செய்வதாகவும் இது குறித்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் பதிலளிக்குமாறும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
English Summary : Compulsory entrance exam for medical studies, Supreme court ordered.