சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் அஜித் வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இணையதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் அஜித் ஏன் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளனர்.

நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் இதுகுறித்து கூறியதாவது: பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளார் அஜித். கடந்த சில வருடங்களாக அதைக் கடைப்பிடித்தும் வருகிறார். அதனால் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. நடிகர் சங்கம் மீது அஜித் அதிருப்தியில் உள்ளதாக வதந்திகள்தான் வெளிவந்தன. ஆனால் நட்சத்திர கிரிக்கெட் குறித்து அஜித் எந்தவொரு பேட்டியோ, அறிக்கையோ வெளியிடவில்லை’ என்று கூறினார்.

மேலும் நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியபோது, “நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் அஜீத் கலந்துகொள்ளாததால் அவர் மீது கோபம் இல்லை. கலந்து கொள்ளாத யார் மீதும் கோபம் இல்லை. நடிகர் சங்கத்தில் எல்லோரையும் சமமாக நடத்துகிறோம். அஜித்தின் கருத்தை மதிக்கிறோம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தது அவருடைய தனிப்பட்ட உரிமை. எனக்கும் அஜித்துக்கும் எவ்விதப் பிரச்னையும் கிடையாது. சக நடிகர்களிடம் பிரச்னை செய்வதற்காக நடிகர் சங்கத்துக்கு வரவில்லை.

ஓர் ஆங்கிலப் பத்திரிகையின் முதல் பக்கத்தில், நடிகர் சங்க நிகழ்ச்சியில் அஜித்தின் பாடலை விஷால் நிறுத்தினார் என்று செய்தி வெளியானது. செய்தியே முதலில் தவறு. மேலும் அஜித்தின் பாடலை விஷால் நிறுத்தியது என்பது ஒரு செய்தியா? அந்தச் சம்பவம் உண்மையா என்று என்னிடம் கேட்டு செய்தி வெளியிட்டிருக்கலாம்’ என்று கூறினார்.

English Summary : Reason for Ajith not attending Natchathira cricket, explained by Nadigar Sangam.