தமிழகத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பல மாணவர்கள் இந்த விடுமுறையில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் சேருவது வழக்கம். இந்நிலையில் கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கி வரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான சிஎஸ்சி நிறுவனம் சார்பில் கணினி பயிற்சிக்கான உதவித் தொகை பெறுவதற்கான(சாட்) தேர்வு நாளை அதாவது ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்தின் மையங்களில் நடைபெறவுள்ளது.
இது குறித்து சிஎஸ்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சாட் தேர்வு நாளன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வாளர்கள் தங்களுக்கு உகந்த ஏதாவதொரு 15 நிமிடத்தில் இந்தத் தேர்வை எழுதலாம். இந்தத் தேர்வில் 25 பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அனைத்தும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் இருக்கும். ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம். தேர்வில் பங்கேற்க எந்தவிதக் கட்டணமும் கிடையாது.
தேர்வு எழுத விரும்புவோர் அருகில் உள்ள சிஎஸ்சி நிறுவனத்தின் கிளைகளை அணுகி இலவச அனுமதி அட்டை, மாதிரி வினாக்களை பெற்றுக் கொள்ளலாம். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சிஎஸ்சி கணினி கல்வி நிறுவனம் நடத்தும் அனைத்து மையங்களிலும் 75 சதவீத உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary: CSC Computer Institution conducts SAT exam Tomorrow. Those who pass exam gets 75% scholarship.