வானிலை அறிக்கை என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது ரமணன் அவர்கள்தான். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணிபுரிந்த ரமணன் கடந்த மார்ச் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். இந்திய வானிலை ஆய்வு மையத்தில் கடந்த1980-ல் மூத்த உதவியாளராக சேர்ந்த இவர், கடந்த 36 ஆண்டுகளாக இந்த துறையில் பணியாற்றியுள்ளார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற ரமணன் பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘தானே புயலின்போது அதிகளவில் உயிர்களை காப்பாற்ற முடிந்தது. இதுபற்றி வானொலியில் தொடர்ந்து வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை. இது மக்களின் உயிரை காக்கும் சேவை. கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் சென்று மரணம் அடையவில்லை. இதுவே மனதுக்கு நிறைவைத் தருகிறது.

வானிலை கணிப்புகள் என்பது உலகளாவிய மாதிரியை பின்பற்றியது. வானிலையை பொறுத்தவரை, நாம் மட்டும் கணிப்பதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உலகம் முழுமைக்கும் கணிக்கின்றன. அந்த தகவல்களையும் கொண்டுதான் நாம் கூறுகிறோம். கோடையின்போது, வெப்பத்துக்கு தயாராக இருக்க வேண்டும். நிலக் காற்று வேகமாக இருக்கும். அதிகமாக காற்றடித்தால்தான் மழையும் வரும். கோடை வெப்பம் அதிகமாக இருந்தால் தால் மழையும் அதிகமாக இருக்கும்.

வானிலை குறித்த மேற்படிப்புகள் மிகவும் அவசியமானது. ஆனால், இந்தியாவில் இந்த படிப்புக்கு வேலை கிடைக்கும் என கூற முடியாது. இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் வேலை கிடைக்கும். அமெரிக்காவை போல் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் வந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மேலை நாடுகளில் ஆராய்ச்சி படிப்பு முடித்தால் பிரகாசமான எதிர்காலம் உண்டு. இதற்கு ஐஐடி டெல்லி, காரக்பூரில் எம்டெக் சூழல் அறிவியல் படிக்க வேண்டும். அதன்பின் மேற்படிப்பு படிக்கலாம்.

சென்னையை பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளில் 2 டிகிரி வெப்பம் அதிகரித்துள்ளது. இதை தடுக்கமுடியாது; அனுசரித்து தான் போக வேண்டும். வெயிலின் தாக்கத்தை குறைக்க மாடியில் தோட்டம் அமைக்கலாம். வெண் பூச்சு அல்லது சூரிய மின்தகடு அமைத்து மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம். தரையில் சிமென்ட் போடுவதை விட செடி வைத்து பராமரித்தால், வெப்பத்தின் தாக்கம் குறையும்.

ஓய்வுக்கு பின்னர் அதிக நேரம் இருப்பதால் பள்ளிகள், கல்லூரிகளில் வானிலை தொடர்பாக நடக்கும் உரையாடல்களில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன். என்னிடம் கடைநிலை ஊழியர் முதல் மேல் நிலையில் இருப்பவர்கள் வரை நன்றாக பழகுவார்கள். அவர்களை இனி பார்க்கமுடியாதே என்பதில் வருத்தமாக உள்ளது. அதே நேரம் இனி குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க முடியும் என்பதில் மகிழ்ச்சி.

இவ்வாறு ரமணன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

English Summary: I will create awareness among students in Schools and Colleges about Atmosphere and Climate, Ramanan.