இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுக் கட்டணங்கள் நேற்று முதல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா நிறுவனங்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் 116 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்திய தொல்லியல் ஆராய்ச்சி மையம் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு செய்து வருகிறது. இதில் 36 உலக பராம்பரிய சின்னங்களாக பராமரிக்கப்பட்டு வரும் இடங்களுக்கு ஒருவித நுழைவுக் கட்டணமும், மற்ற இடங்களுக்கு ஒருவித நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 403 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறை பராமரித்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரம் உலக பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளில் இருந்தும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் உலக பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கான கட்டணங்களை மூன்று மடங்காக உயர்த்தி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணம் ரூ. 10லிருந்து ரூ. 30 ஆகவும், வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டணம் ரூ. 250ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல பாரம்பரிய சின்னங்கள் அல்லாத பகுதிகளுக்கான கட்டணம், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 5ல் இருந்து ரூ. 15 ஆகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.100ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் இற்போதுதான் இந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டணங்கள் வெளிநாடுகளில் உள்ள நினைவகங்களுக்கு இணையாக இ உயர்த்தப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பு ஒன்றில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு சுற்றுலாத் துறையின் வருவாயை பெருக்குவதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து தருவதற்கும் உதவும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் டெல்லி அருகே ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கும் கட்டணம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க் இந்தியர்களுக்கு ரூ.20-ல் இருந்து ரூ.40ஆகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.750ல் இருந்து ரூ.1000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கு சுற்றுலாத் துறையினரும், சுற்றுலா ஏஜெண்டுகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டண மாற்றத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary: Entry Fees is increased of 3 times in Mahabalipuram, Taj Mahal and many other Indian Tourist Places by Archaeological Department.