டிஜிட்டல்’ மின் கட்டண சேவைகளுக்கு, தனி மையம் துவக்கும்படி, மின் வாரியத்தை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய, மின் கட்டணத்தை, ரொக்கப் பணம், காசோலை, வரைவோலையில் செலுத்தலாம். மேலும், இணையதள வங்கி, மொபைல், ‘ஆப்’ என்ற செயலி, ‘டெபிட், கிரெடிட் கார்டு’ வாயிலாக, ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி யிலும் செலுத்தலாம். பலரும், மின் வாரிய மையங்களில், ரொக்க பணமாகவே, மின் கட்டணத்தை செலுத்துகின்றனர். இதற்கு காரணம், டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்த, அவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில், டிஜிட்டல் மின் கட்டணத்திற்கு, தனி சேவை மையம் துவக்கும்படி, மின் வாரியத்தை, மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது. இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: மின் வாரிய இணையதளம், மொபைல் ஆப் வாயிலாக, மின் கட்டணத்தை செலுத்தும் போது, சில சமயங்களில், நுகர்வோரின் வங்கி கணக்கில் இருந்து, பணம் எடுக்கப்பட்டு விடுகிறது.
அந்த பணம், வாரிய கணக்கில் வருவதில்லை. சில சமயங்களில், ‘சர்வர்’ பிரச்னையால், டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் போது, வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது; மின் வாரியத்திற்கு செல்வதில்லை. இரண்டு, மூன்று நாட்களுக்கு பின், வங்கி கணக்கிற்கே, அந்த பணம் செல்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், உரிய பதில் அளிப்பதில்லை. இந்த சூழலில், மின் வாரிய அலுவலகத்தில், டிஜிட்டல் கட்டணத்துக்கு என, தனி சேவை மையத்தை துவக்கும்படி, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதில், டிஜிட்டல் முறையில், எப்படி மின் கட்டணம் செலுத்தலாம் என்பதையும், அதில் உள்ள பாதிப்புகளை தெரிவித்து, உடனடி தீர்வும் காணலாம். எனவே, அந்த மையத்தை, வாரியம் விரைவில் துவக்க வேண்டும்.