தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாகவும் பாரபட்சமின்றியும் தேர்தல் அதிகாரிகளால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள் மற்றும் கட்சி விளம்பரங்கள் ஆகியவை பள்ளிகளில் இருக்கக் கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா, பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. எனவே, பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள், கட்சி விளம்பரங்கள் வைக்க தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு ஏதேனும் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அரசு துறையின் இணையதளங்களிலும் அமைச்சர்களின் படங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் இருப்பின் அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
English summary : Education Department Order for Remove a Political Leader Photos in Schools.