சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரெயில் சேவை சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு இடையே கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் பொதுமக்களின் பேராதரவுடன் இயங்கி வருகிறது. மேலும் ஆலந்தூர் முதல் பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த பணிகள் இவ்வருட முடிவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சென்னை எழும்பூர் முதல் திருமங்கலம் வரையிலான வழித்தடத்திலும் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் இடையேயான வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
சைதாப்பேட்டை சின்னமலை முதல் விமான நிலையம் இடையே உயர்மட்ட பாதையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிகள் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிநிறைவடையும் என்றும் இந்த வழித்தடத்தில் கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் ரோடு, மீனம்பாக்கம் ஆகிய ரெயில் நிலையங்கள் அமைகின்றன என்றும் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் எழும்பூர் முதல் திருமங்கலம் இடையேயான மெட்ரோ ரெயில் சுரங்கபாதை அமைக்கும் பணிகள் 2017 டிசம்பர் மாதம் முடிவடையும். இந்த வழித்தடத்தில் நேரு பார்க், கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, செனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர் ஆகிய ரெயில் நிலையங்கள் அமைகின்றன. வண்ணாரப்பேட்டை முதல் சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும். இதில் மண்ணடி, ஐகோர்ட்டு ஆகிய ரெயில் நிலையங்கள் அமைகின்றன.
அரசினர் தோட்டம் முதல் சைதாப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையும். இதில் எல்ஐசி, ஆயிரம் விளக்கு, டி.எம்.எஸ்., தேனாம்பேட்டை, நந்தனம் ஆகிய ரெயில் நிலையங்கள் அமைகின்றன.
மேலும் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் இடையே 9.கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் முதல் 2.2. கி.மீ தூரம் சுரங்க வழித்தடமாகவும், 6.8. கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையாகவும் அமைகிறது. இதில் 8 ரெயில் நிலையங்கள் அமைகின்றன. இந்த வழித்தடத்திற்கான கட்டுமான வடிவமைப்பு பணியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிஸ்ட்ரா என்ற நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
மேலும் 3 வழித்தடத்திலும் கூடுதலாக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே 2 கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 3வது கட்டமாக மாதவரம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராதா கிருஷ்ணன் சாலை, லஸ் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
4வது கட்டமாக கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், லஸ், மந்தவெளி, அடையார், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், வழித்தடத்திலும், 5–வது கட்டமாக மாதவரம், வில்லிவாக்கம், முகப்பேர், மதுரவாயல், சென்னை வர்த்தக மையம், ஆதம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம் வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது. 3, 4, 5வது கட்ட பணிகள் 84 கி.மீ. தொலைவுக்கு அமைகிறது.
English Summary : Officials announced that Egmore-Thirumangalam Metro train subway will end in 2018.