trainவரும் 2016ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15ஆம் தேதி வர இருக்கிறது. இந்த பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்பவர்கள் ரெயிலில் தற்போது முன்பதிவு செய்ய தொடங்கி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜனவரி 12ஆம் தேதி சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய உள்ள பயணிகள் நேற்று காலையில் இருந்தே தங்கள் முன்பதிவு தொடங்கிவிட்டனர்.

மேலும் 14ஆம் தேதி போகிப் பண்டிகைக்கு முந்தின நாள் 13ஆம் தேதி வீட்டிற்கு சென்றடையும் வகையில் 12ஆம் தேதி பயணம் மேற்கொள்ள பலரும் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்தனர். தமிழகத்தின் தென் பகுதியில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் சென்னையில் தங்கி தொழில் மற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு செல்வது இதுபோன்ற பண்டிகையின்போது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் பொங்கல் பண்டிகையின்போது தொடர்ச்சியாக நான்கு அல்லது ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் கிட்டத்தட்ட சென்னையே காலியாகிவிடும் அளவிற்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிடுவர். அவர்களுக்கு கடைசி நேரத்தில் இடம் கிடைக்காமல் கஷ்டப்படுவதை தவிர்க்க 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யப்படுகிறது.

நேற்றைய தினத்தில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்பதிவு மந்தமாகவே இருந்ததாகவும், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய முன்பதிவு மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியோ அல்லது ஏஜெண்டு மூலமாகவோ ரெயில்களில் முன்பதிவு செய்து வருவதால் கவுண்டர்களில் கூட்டத்தை காண முடியவில்லை. பயண தேதி உறுதியாகி விட்டால் அதற்கான முன்பதிவு நாட்களில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்கின்றனர்.

காலப்போக்கில் முன்பதிவு செய்ய ரெயில் நிலையங்களுக்கு செல்லும் நிலை முற்றிலுமாக நின்றுவிடும் என்றும், அந்த அளவுக்கு தொழில்நுட்பமும், தகவல் பரிமாற்றமும் நடந்து வருகின்றது என்றும் ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறினார். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக செல்லக்கூடிய ரெயில்களில் இடம் பிடிக்க கடுமையான போட்டி ஏற்படும். ஜனவரி 12ஆம் தேதி பயணத்திற்கு இந்த ரெயில்களில் இடம் இன்னும் நிரம்பவில்லை. பொங்கலுக்கு முந்தைய நாளான கடைசி தினத்தில் சொந்த ஊர் சென்றடைவதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய இந்த முன்பதிவு நடக்கிறது. இதற்கு கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary:Train Ticket Booking Starts For Pongal Day.