சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு மத்திய அரசு அவர்களுடைய வங்கிக்கணக்கில் நேரடி மானியத்தை போட்டு வருகிறது. இந்த மானியத்தை பெற பதிவு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நாளான நேற்று முன் தினம் அதிகளவிலான பொதுமக்கள் வரிசையில் நின்று பதிவு செய்தனர். இந்நிலையில் சமையல் எரிவாயு இணைப்பிற்கு நேரடி மானியம் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றில், “சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், அதில் ஆதார் அட்டை எண் மற்றும் வங்கிக் கணக்கு கட்டாயம் என அரசு கூறுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும் இந்த திட்டத்தில் சேர, அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக அரசு குறுகிய காலக்கெடு விடுத்துள்ளதாகவும், அந்த காலக்கெடுவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் சமையல் எரிவாயு நேரடி மானியம் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளதால் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
English Summary : Extension of the deadline until June 30 to get the subsidy for LPG