முன்னாள் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், பிரபல நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜய்காந்த் அவர்களின் நெருங்கிய நண்பருமான இப்ராஹிம் ராவுத்தர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 64.
விஜயகாந்த் நடித்த ‘பரதன்’, ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ’என் ஆசை மச்சான் உள்பட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த இப்ராஹிம் ராவுத்தர், கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மேல்சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் செல்ல திட்டமிட்ட நிலையில் இன்று காலை அவர் மரணம் அடைந்தார்.
சிறுவயதில் இருந்தே விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
மரணம் அடைந்த இப்ராஹிம் ராவுத்தரின் உடல் சென்னை எம்.எம்.டி.ஏ அருகில் உள்ள இப்ராஹிம் பிலிம்ஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
English Summary:Famous Flimmaker Ibrahim Rowther died