Fishery Sciences University's ranking list released
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வள பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இத்தரவரிசைப் பட்டியலை www.tnfu.ac.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பதாரருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள Login ID உதவியுடன் பார்க்கலாம் என்று தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவர் சண்முகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இளநிலை மீன்வள அறிவியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திகா, நாகர்கோவிலைச் சேர்ந்த லட்சுமி ஆகிய இரண்டு மாணவிகள் 197 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இளநிலை மீன்வளப் பொறியியல் படிப்புக்கு திருவள்ளூரைச் சேர்ந்த சுகன்யா என்ற மாணவி 197.75 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி மற்றும் பொன்னேரியில் உள்ள மீன்வள அறிவியல் கல்லூரிகளில் பி.எஃப்,எஸ்சி. என்னும் இளநிலை அறிவியல் பிரிவில் 60 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் இளநிலை மீன்வள அறிவியல் என்னும் பி.இ படிப்புக்கு 20 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை அறிவியல் பிரிவில் 1,881 பேரும், பொறியியல் பிரிவில் 819 பேரும் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

English Summary: Fishery Sciences University’s ranking list released