Actor interim ban on union elections
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக இடைக்கால விதித்துள்ளது. இந்த தடை காரணமாக சரத்குமார் அணிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் என பொதுச்செயலாளர் ராதாரவி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூலை 15ஆம் தேதி புதன்கிழமை என்பதாலும், அன்றைய தினம் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பில் இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாலும், தேர்தலை ஞாயிற்றுக்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ராதாரவி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘, நடிகர் சங்கத் தேர்தல் நடத்தும் தேதியை செயற்குழுதான் முடிவு செய்ததாகவும், செயற்குழு முடிவின்படி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டிதில்லை என்றும் 3,500 உறுப்பினர்களில் 3 பேர் மட்டுமே தேர்தல் தேதி, இடத்தை மாற்ற கோரிக்கை வைத்துள்ளதால் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக நடிகர் சங்கம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் இன்று வேட்பு மனு தொடங்கவிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தேர்தலுக்கு அதிரடி தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் நடிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

English Summary: Actor interim ban on union elections . Madras High Court ordered the action