சாலைகளில் உள்ள வேகத்தடைகளை அறியாமல் வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்குள்ளாகும் நிலையை தவிர்க்க வேகத்தடைகளில் “ஃபோகஸ்’ விளக்குகள் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் உள்ள 387 கி.மீ. நீள பேருந்து சாலைகள் மற்றும் 5,623 கி.மீ. நீளமான உள்புறச் சாலைகளில் விளக்குகள் அமைப்பது, சாலைத் தடுப்புகள் அமைப்பது, வேகத் தடைகள் அமைப்பது போன்ற பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

சென்னையின் சில இடங்களில் முறையான வடிவமைப்பு இல்லாமல் வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருவதோடு சில சமயம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது.

இந்நிலையில் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து எழுந்துள்ள கோரிக்கைகளை அடுத்து வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் சாலைகளில் உள்ள வேகத் தடைகளுக்கு அருகில் “ஃபோகஸ்’ விளக்குகளை அமைக்க மாநகராட்சி உத்தேசித்துள்ளது. இதனால், இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத் தடைகள் இருப்பது முன்கூட்டியே தெரிந்துவிடும். இதன் காரணமாக விபத்துகளும் தவிர்க்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.