சென்னையில் கடந்த மாதம் கனமழை பெய்து அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியதை அடுத்து தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பனி அதிகமாக உள்ள நிலையில் வரும் வியாழன் அன்று அதிகாலை நேரங்களில் புகை நிறைந்த மூடுபனி நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், எந்த ஒரு மாவட்டத்திலும் மழை பதிவாகவில்லை. தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமையும் வறண்ட வானிலையே நிலவும். அதைத் தொடர்ந்து, மேலும் இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும் வாய்ப்புண்டு. சென்னையில் வானம் தெளிவாக இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில், அதிகாலை நேரங்களில் புகை நிறைந்த மூடுபனி காணப்படும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகளில், வட கிழக்கிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
English summary: Fog in Chennai on Thursday, Chennai Meteorological Department.