சென்னை துறைமுகம் வழியாக ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி அளிக்கும் வகையில் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் திருத்தம் செய்யப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. சென்னையை போலவே இனி மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்தும் ஆப்பிளை இறக்குமதி செய்து கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, சிலி உள்பட பல நாடுகளிலிருந்து ஏராளமான ஆப்பிள்கள் குளிரூட்டப்பட்ட சரக்குப் பெட்டகங்களில் நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்கள் வழியாகவும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. இவற்றில், மும்பை, சென்னை துறைமுகங்கள்தான் அதிக அளவில் ஆப்பிள் பழ இறக்குமதியில் முக்கிய இடம் பெற்றன.  இந்நிலையில், மும்பையிலுள்ள நவசேவா துறைமுகம் வழியாக மட்டுமே இனி ஆப்பிள் இறக்குமதி செய்ய முடியும் என்று வர்த்தக அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.  சர்வதேச சந்தையில் இருந்து இந்திய ஆப்பிள் விவசாயிகளைக் காப்பாற்றும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த உத்தரவுக்கு சென்னையிலுள்ள ஆப்பிள் இறக்குமதியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு துறைமுகத்துக்கு மட்டும் அனுமதி என்றால் தென் மாநிலங்களில் ஆப்பிள் விலை கடுமையாக உயரும் என்று வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை இறக்குமதியாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த மனு பரிசீலிக்கப்பட்டு மத்திய வர்த்தக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், “வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் செய்துள்ள புதிய திருத்தங்களின்படி சென்னை, மும்பை, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள துறைமுகங்கள், தில்லி விமான நிலையம் வழியாக ஆப்பிள் பழங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.  மேலும் இந்திய எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாகவும் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு காரணமாக சென்னை ஆப்பிள் இறக்குமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகரன் கூறுகையில், நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு சாதகமாகவும், இதர பகுதியினருக்கு பாதகமாகவும் இருந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  இதனால், சென்னையில் ஆப்பிள் பழ இறக்குமதி வர்த்தகம் தடையின்றி நடைபெறும். மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம் என்று கூறினார்.
English Summary: Central government is planning to import Apples in Chennai Harbor.