முன்னாள் குடியரசு தலைவரும், இந்திய விஞ்ஞானிகளின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் ஆன ஏபிஜே அப்துல்கலாம் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84
மேகாலாய மாநிலத்தின் ஷில்லாங் நகரில் அமைந்துள்ள, ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்துல்கலாம், மாலை சுமார் 6 மணியளவில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மார்பை பிடித்துக் கொண்டு மேடையில் அப்படியே சரிந்தார். இதனால் மேடையில் இருந்தவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, மயங்கிய நிலையில் இருந்த கலாம் நாங்ரிம் மலைப் பகுதியில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் அளித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து இந்திய ராணுவ மருத்துவர்கள் விரைந்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து கலாம் மாரடைப்பால் காலமானதாக நேற்று இரவு 7.45 மணிக்கு மருத்துவர்கள் அறிவித்தனர்.
அப்துல்கலாமின் மறைவிற்கு இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். அப்துல்கலாமின் மறைவை ஒட்டி தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இன்று விடுமுறை என அறிவித்துள்ளது. இருப்பினும் வழக்கம்போல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மறைந்த அப்துல்கலாம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் என்பதும் அவர் இந்த பல்கலைக்கழகத்தில் கெளவுரவ பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் முன்னாள் மாணவர் என்பதன் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி மற்றும் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளிலும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
அப்துல் கலாமின் மறைவு குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக மண்ணின் அன்புக்குரிய தலைமகனும், பாரதரத்னா விருது பெற்றவரும், அனைவராலும் ஈர்க்கப்பட்ட மிகச்சிறந்த விஞ்ஞானியும், நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராகவும் விளங்கிய ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், திடீரென மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். தொழில்நுட்பத்தை அணிதிரட்டி அதன்மூலம், ஏழை-எளிய மக்களுக்கு எத்தகைய நன்மைகளை அளிக்க முடியும் என்ற சிந்தனையையே தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தார். அவரது மறைவுக்கு இந்திய, தமிழக மக்களுடன் இணைந்து நானும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
English Summary:Former indian president A.P.J Abdul kalam passes away. Mourning Leaders