பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காகவும் விரைவில் தங்கப்பத்திரம் வெளியிடப்படும் என கடந்த பட்ஜெட்டில் பாரத பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் தங்கப்பத்திரம் என்ற புதிய திட்டத்தை இன்று பிரதமர் மோடி டெல்லியில் துவக்கி வைக்கின்றார். இந்த திட்டத்தின்படி அஞ்சல் நிலையங்களில் தங்கப் பத்திரங்களைப் பெறுவதற்கு நவம்பர் 6 அதாவது நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மண்டல அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது: 2015-16ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bond) வெளியிடப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்தப் புதியத் திட்டத்தை நவம்பர் 5-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, சென்னை நகர மண்டலத்திலுள்ள 20 தலைமை அஞ்சல் நிலையங்களிலும், 30 பிரதான அஞ்சல் நிலையங்களிலும், வெள்ளிக்கிழமை (நவ. 6) முதல் தங்கப் பத்திரங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும். அன்றைய தினம் முதல் 15 நாள்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்’ இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான வட்டி 2.75 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த பட்சம் 2 கிராம் முதல் அதிக பட்சம் 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். கடந்த அக்டோபர் 26 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் இருந்த தங்கத்தின் விலை அடிப்படையில் முடிவு விலை சராசரியை அடிப்படையாக வைத்து ஒரு கிராம் தங்க பத்திரத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பத்திரங்கள் தபால் நிலையங்கள், வங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
இந்த பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 வருடங்கள் ஆகும். ஐந்து வருடங்களுக்கு பிறகே இந்த முதலீட்டினை திரும்ப பெற முடியும். இந்த கடன் பத்திரங்கள் மீதான வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கான தங்கப் பத்திரங்கள் நவம்பர் 26-ஆம் தேதி வழங்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English summary-Gold bonds deposit in post office from tomorrow