wards-51115தீபாவளி திருநாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பட்டாசு, மத்தாப்பு ஆகியவைகளை வெடிக்கும்போது எதிர்பாராமல் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ‘வார்டு’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் நாராயணபாபு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு வார்டு அமைக்கப்படும். அதேபோல், இந்த ஆண்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீக்காயப்பிரிவில் 50 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு உள்ளது. தற்போது கூடுதலாக பெரியவர்களுக்கு 10 படுக்கை வசதிகளும், சிறியவர்களுக்கு 5 படுக்கை வசதிகளும் கொண்ட சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பட்டாசினால் ஏற்படும் தீக்காயங்களுக்கு தேவையான களிம்பு, ஊசிகள், மருந்துகள், கட்டுப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் துணிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இந்த சிறப்பு வார்டு செயல்படும். இந்த வார்டில் பொறுப்பு டாக்டர், முதுநிலை டாக்டர் மற்றும் 8 செவிலியர்கள் பணியில் இருப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல், தீக்காயம் ஏற்பட்டு வரும் நபருக்கு முதல் சிகிச்சை செய்வதற்காக அவசர சிகிச்சை பிரிவில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தலா 10 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் பொறுப்பு டாக்டர்கள், முதுநிலை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் என 10 பேர் பணியில் இருப்பார்கள்.

பட்டாசினால் தீக்காயம் ஏற்பட்டதும், முதலில் அந்த காயத்தை வீட்டில் உள்ள குழாய் நீரில் கழுவ வேண்டும். பின்னர், துவைத்த துணியால் அந்த காயத்தை மூடி, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மை, மஞ்சள், காபிதூள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டாம். அப்படி உபயோகப்படுத்தினால், காயத்தின் தன்மை தெரியாமல் போய்விடும். கடந்த ஆண்டு இதே போல் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டில் 10 பேர் சிகிச்சை பெற்று சென்றனர்.

இவ்வாறு டாக்டர் நாராயணபாபு கூறினார்.
English summary-Special ward for burn injuries at Kilpauk GH