மத்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி மூலம் கடந்த நவம்பர் 5ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தங்கப்பத்திரத் திட்டத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு தங்கத்தின் எடை மதிப்புக்கு இணையான விலைமதிப்பு கொண்ட பத்திரங்களை வழங்கவும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையை திரும்பக் கொடுத்து 2.75 சதவீத வட்டியும் கொடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. தபால்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த தங்கப்பத்திரத் திட்டத்தில் இந்திய அளவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதாகவும், தமிழக அளவில் மேற்கு மண்டலம் முன்னிலை வகித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
நவ.5ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து தங்கப் பத்திர திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் குறைந்தபட்சம் 2 கிராமிலிருந்து அதிகபட்சமாக 500 கிராம் வரை விண்ணப்பிக்க முடியும். ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.2684 எனவும் முதலீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.
தங்கத்துக்கான பத்திரத்தை ஆவண வடிவில் ரிசர்வ் வங்கி கொடுப்பதால் நம்பகத்தன்மை மிகுந்ததாக இந்த திட்டம் கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்த திட்டம் தொடங்கிய உடனே இதில் சேர்வதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். 15 நாட்களில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், இதில் இந்திய அளவில் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பட்டியலில் தமிழகம் இரண்டாமிடத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து 1325 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், மக்கள் ரூ.1,81,15,000 முதலீடு செய்துள்ளதாகவும் தபால் துறை அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறினர்.
இவற்றில் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் தமிழக அளவில் அதிகம் பேர் விண்ணப்பித்த பகுதிகளில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த மண்டலத்தில் 477 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், ரூ.63.12 லட்சம் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும் தபால்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தபால்துறை அதிகாரிகள் மேலும் கூறியபோது, ‘திட்டம் 8 ஆண்டுகளுக்கும், முதிர்வு காலமாக 5 ஆண்டுகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் முடிந்து திட்டத்தை முடித்துக் கொள்பவர்களுக்கு அப்போதைய தங்க விலை நிலவரப்படி, தொகை வழங்கப்படும். தங்கத்தின் மீதான முதலீட்டு திட்டங்களில் வருவாய் என்பது எப்போதும் ஏற்ற, இறக்கத்தின் அடிப்படையில் இருக்கும். ஆனால் இத்திட்டத்தில் கூடுதலாக வட்டி வழங்கப்படுவதாலும், காகித வடிவிலான பத்திரம் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாலும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் தங்கத்தை நகையாக வைப்பதை விட, முதலீட்டை தங்கத்தின் மதிப்பில் உள்ள பத்திரமாக வைப்பது பாதுகாப்பானது’ என்று கூறினர்.
English summary-Huge response for central govt gold deposit scheme