நகரங்களின் வாழ்க்கை வசதி குறித்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்; இதற்கான ட்விட்டரில் அதிக தகவல்களை பகிர்பவருக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்திய நகரங்களின் வாழ்க்கை வசதி மற்றும் நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீட்டை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. நகரத்தின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, சுற்றுசூழல் போன்றவைக்கு 70 சதவீதமும், நகரத்தில் வசிக்கும் பொதுமக்களின் கருத்துக்கு 30 சதவீதமும் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் தாங்கள் வாழும் நகரங்கள் குறித்த கருத்துகளை https://eol2022.org/CitizenFeedback%2c என்ற இணையதள பக்கத்தில் தெரிவிக்கலாம்.
இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னையின் வாழ்க்கை தரம், பொருளாதார வாய்ப்புகள், நிலைத்தன்மை குறித்து பொதுமக்கள் அளிக்கு கருத்து மாநகராட்சி எதில் எதில் பின்னடைவாக உள்ளது என தெரிந்து கொள்ளவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் உதவும்.
மேலும், 2022 தேசிய தரவரிசைகளில் சென்னையை கணக்கிடுவதில் இது முக்கிய பங்கு வகிக்கும். சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள இது தொடா்பான பதிவை அதிகம் பகிருபவருக்கு 5,000 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.