கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹிதேந்திரன் என்ற மாணவர் ஆரம்பித்து வைத்த இந்த விழிப்புணர்வு தற்போது தமிழகமெங்கும் பரவி வருகிறது. உடல் உறுப்புகள் தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூளைச்சாவு அடைந்தவர்களின் இதயம் உள்பட முக்கிய உறுப்புகளை தானம் கொடுக்க அவர்களது உறவினர்கள் தற்போது அதிகளவு முன்வருகின்றனர். தமிழகத்தில் உள்ள இந்த விழிப்புணர்வு தற்போது நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் நடந்த கார் விபத்தில் 12 வயது சிறுவன் ஆதித்பால்சன் மற்றும் அவரது தந்தை படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சிறுவன் மூளைச்சாவு அடைந்ததால், அந்த சிறுவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவனது குடும்பத்தினர் முன் வந்தனர். ஆதித்பால்சன் இருதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை சென்னையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 24 வயது வாலிபருக்கு இருதய நோய் காரணமாக செயல்பாடு மோசமாக இருந்தது. மேலும் அவரது நுரையீலும் பாதிக்கப்பட்டு இருந்தது. 2 உறுப்புகளையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றினால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் கொச்சி சிறுவனின் இருதயம் மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வாலிபருக்கு பொருத்த டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். திட்டமிட்டப்படி சிறுவனின் இருதயம், நுரையீரல் உடலில் இருந்து அகற்றப்பட்டு பாதுகாப்புடன் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து போலீசாரின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் மலர் மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தயாராக இருந்த டாக்டர் குழுவினர் 24 வயது வாலிபருக்கு இருதயம், நுரையீரலை மாற்றி பொருத்தினர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செயல்பட்டதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மலர் மருத்துவமனையின் கூடுதல் பொதுமேலாளர் அசோக் மகாதேவன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறிய போது, “கடந்த 7 வருடமாக இந்த மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இது 50-வது இருதய மாற்று அறுவை சிகிச்சையாகும். கேரளாவில் இருந்து முதன் முதலாக வந்த உடல் உறுப்பு தானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர்கள் இந்த ஆபரேஷனை சிறப்பாக செய்துள்ளனர்” என்று கூறினார்
கேரள சிறுவனின் இருதயம் தமிழ்நாட்டு வாலிபரின் உடலில் பொருத்தப்பட்டு ‘லப்டப்… லப்டப்’ என்று அடித்துக் கொண்டு இருக்கிறது. மதம், மொழியை கடந்து யாரோ ஒரு சிறுவனின் இருதயம் தானமாக கிடைத்ததால் ஒருவருக்கு மறுவாழ்வு கிடைத்து இருக்கிறது. மனித நேயமிக்க சிறுவனின் குடும்பத்திற்கு மறுவாழ்வு பெற்றவரின் குடும்பம் நன்றியுடன் தங்கள் கண்ணீரை காணிக்கையாக வழங்கியுள்ளது.
English summary : Kerala kids Heart and lungs transplanted for Chennai guy.