தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்தே பாரத் ரயில் உள்பட பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவுதொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்புநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை – சென்னை எழும்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை, இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை – குஜராத் மாநிலம் ஜாம்நகர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில், திருச்செந்தூர் – பாலக்காடு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதவிர சென்னை – நெல்லை இடையேயான விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் – நாகர்கோவில் இடையேயான மற்றுமொரு விரைவு ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், தொடர் கனமழையால் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க இயலாது என்று ஆம்னிப் பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசுப் பேருந்துகள் தேவைக்கு ஏற்ப இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.