கோலிவுட் திரைப்படங்களில் தற்போது ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரிவது சர்வசாதாரண விஷயமாகிவிட்டது. கமல்ஹாசன் நடிக்கும் ‘தூங்காவனம்’ படத்தில் பிரான்ஸ் நாட்டு ஸ்டண்ட் கலைஞர்கள் பணிபுரியவுள்ளதை அடுத்து தனுஷ் படத்திலும் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் பணிபுரிய இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ‘கயல்’ என்னும் வெற்றிப்படத்தை இயக்கிய பிரபுசாலமன், அடுத்து தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். முழுக்க முழுக்க ரயிலில் படமாக்கப்படவுள்ள இந்த படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாம்.

எனவே இயக்குனர் பிரபுசாலமன் ஹாலிவுட் ஸ்டண்ட் பயிற்சியாளர் ரோஜர் யுவான் (Roger Yuan) அவர்களை இந்த படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஜேம்ஸ்பாண்ட் நடித்த ‘ஸ்கைஃபால் உள்பட பல ஹாலிவுட் படங்களுக்கு அதிரடி சண்டைக்காட்சிகளை அமைத்து உலக அளவில் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். வி.மகேந்திரன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Hollywood Stunt performer Roger Yuan will be working in Dhanush’s film.