தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கத்தில் வாக்களிக்கும் உரிமை உள்ளவர்களின் வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்த வாக்காளர் பட்டியலில் இதுவரை ஓட்டுப் போடும் உரிமையை பெற்றிருந்த, ஆயுட்கால உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் வாக்கு பறிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கருணாநிதியை வருடாவருடம் சந்தா கட்டவேண்டியவர்கள் பட்டியலுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு மாற்றப்பட்ட தகவல் அவருக்கு முறைப்படி தெரிவிக்கவில்லை என்றும் தேர்தலின்போது வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போது சந்தாவை முறையாகக் கட்டாத உறுப்பினர்கள் ஓட்டுப்போடும் தகுதியை இழக்கிறார்கள் என்கிற விதியின்படி கருணாநிதியின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியே தெரிந்தவுடன் திமுக ஆதரவு நடிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்களாம். மூத்தஉறுப்பினர் முன்னாள் முதல்வர், கதாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பல கோணங்களில் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் சேவை செய்த வந்தவர் கருணாநிதி. திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்குக் கொடுக்கும் திட்டம் உட்பட பல திட்டங்களை திரையுலகுக்காக செய்தவர். அவரை அவமானப்படுத்தும் வகையில் இப்படிச் செய்யலாமா? என்று குமுறிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆனால் அதே நேரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் ஆயுட்கால உறுப்பினராக இருப்பதால் அவர் வாக்களிக்கும் தகுதியில் இருக்கின்றார் என்று கூறப்படுகிறது.
English Summary:How to karunanithi lost the right to vote for actors association?