இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கு ஆதார் அட்டை வழங்கிட மத்திய மாநில அரசு கடந்த சில மாதங்களாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆதார் அட்டை என்பது அடையாள அட்டையாக மட்டுமின்றி கேஸ் இணைப்பு, வங்கிக்கணக்கு உள்பட பல்வேறு தேவைகளுக்கு அத்தியாவசியமானதாக கருதப்படும் நிலையில் நேற்று டெல்லி சுப்ரீம் கோர்ட் அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் அல்ல என்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்குகளில் ஆதார் அட்டைக்காக குடிமக்களின் கைரேகை, கண்ணின் மணியை பதிவு செய்வது என்பது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல் என கூறப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்குகள் நீதிபதி ஜே.செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, சி.நாகப்பன் ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ‘‘இந்த வழக்கு விவகாரம் விரிவான விவாதத்துக்கு உரியது என்றும் அந்தரங்க உரிமை அடிப்படை உரிமையா? என்பது உள்பட பல கேள்விகளுக்கு சீரற்ற முடிவுகள் ஏற்பட்டிருப்பதால், அதிகார பிரகடனம் தேவைப்படுகிறது என்றும் வாதாடினார். மேலும் 2 அல்லது 3 நீதிபதிகள் அமர்வு இதை முடிவு செய்ய முடியாது என்றும் இதுகுறித்து கூடுதல் எண்ணிக்கையில் நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரிப்பதே சரியானதாக இருக்கும்’’ என்றும் தனது வாதத்தில் கூறினார்.

அட்டர்னி ஜெனரலின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளிக்க அரசியல் சாசன அமர்வினை அமைப்பதற்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்துக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டனர். அதே நேரத்தில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்கள். அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:

அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது. இதுபற்றி மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும், பத்திரிகைகள் வழியாகவும் விளம்பரப்படுத்த வேண்டும். பொது வினியோக திட்டம் (ரேஷன்), மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் தவிர்த்து பிற நோக்கங்களுக்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படக்கூடாது. பொது வினியோக திட்டம், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு கூட இந்த ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது. ஆதார் அட்டைக்காக பதிவு செய்கிற தகவல்களை குற்ற வழக்கு விசாரணை தவிர்த்து பிற எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அதையும் கோர்ட்டு அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தடை விதிக்க மறுப்பு

ஆதார் அட்டை வழங்குவதற்கு தகவல்கள் பதிவு செய்கிற நடவடிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்ற வழக்குதாரர்களின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

English Summary : Supreme court orders that Aadhaar card is not mandatory for Government incentives.