டெல்லி, பெங்களூர் உள்பட இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வந்தபோதிலும், சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் மிகவும் புதிய அனுபவமாக உள்ளது. இந்த ரயிலுக்கு புறநகர் ரயிலை போன்ற டிக்கெட் வழங்காமல் பயணிகளுக்கு டிக்கெட்டுக்கு பதிலாக டோக்கன் வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் முதலில் நேரடியாக முதல் தளத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டருக்கு சென்று அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை கவுண்ட்டரில் உள்ள ஊழியரிடம் தெரிவித்து அதற்கான கட்டணத்தை செலுத்தி டோக்கன் பெற வேண்டும். மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட்டுக்கு பதில் நீல நிறத்தில் தற்காலிகமாக டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்த டோக்கனை பெற்றுக்கொண்ட பின்னர் கையில் உள்ள உடைமைகளுடன் அங்குள்ள ஸ்கேனர் கருவியில் சோதனை உட்படுத்தப்பட்ட பின்னர், உடைமைகளை எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள நுழைவுப்பகுதியில் உள்ள கம்யூட்டர் திரை மீது டோக்கனை வைக்க வேண்டும். டோக்கனை வைத்தால் தானியங்கி கதவு திறக்கும். அதன் பின்னர் உள்ளே சென்று அங்குள்ள எஸ்கலேட்டர் மூலம் மெட்ரோ ரெயில் வரும் 2வது தளத்திற்கு சென்று ரெயிலில் ஏறி பயணம் செய்ய முடியும்
அதே போல் ரெயில் நிலையத்தில் இறங்கிய பின்னர், வெளியே வரும்போது டோக்கனை வாயிலில் உள்ள துளை வழியாக போடவேண்டும். டோக்கனை துளையில் போட்டால் மட்டுமே வெளியே வரமுடியும். எனவே டோக்கனை தொலைக்காமல் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்படும் டோக்கன்கள் மீண்டும் பயணிகளுக்கு வழங்கப்படும். அதனால், டிக்கெட் எடுக்காமல் யாரும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியாது.
ஒவ்வொரு ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர்கள் இருப்பதுபோன்று, டிக்கெட் வழங்கும் எந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. எனவே டிக்கெட் கவுண்ட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தால், டிக்கெட் வழங்கும் எந்திரத்தின் மூலம் டோக்கன் பெற முடியும்.
டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் உள்ள தொடுதிரையில் நாம் பயணம் செய்யும் இடம், வகுப்பு, எத்தனை டிக்கெட் என்பதை தெளிவாக தெரிவித்த பின்னர் அதற்கான கட்டணத்தை ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டாகவோ எந்திரத்தில் உள்ள துளை வழியாக செலுத்த வேண்டும். நமது கட்டணம் போக மீதிப்பணம் இருந்தால் அந்த பணம் மற்றொரு துளை வழியாக வெளியே வரும். அதன்பிறகு, இன்னொரு துளையில் வரும் டோக்கனை எடுத்துச்சென்று ரெயிலில் பயணிக்க முடியும்.
English Summary : Steps to take ticket before traveling in Metro train in Chennai.