சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பள்ளி மாணவர்கள் மிக வேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் கூட அயனாவரம் பகுதியில் 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு பலியான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் கண்டிப்பாக இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 18 வயதுக்கு குறைவானவர்கள் சாலையில் வாகனம் ஓட்டினால் மத்திய மோட்டார் வாகன விதியின்படி வழக்குப் பதிவு செய்து ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை நகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 வயதிற்கு கீழ் உள்ள இளஞ்சிறார்கள் சாலையில் வாகனம் ஓட்டினால் மத்திய மோட்டார் வாகன விதியின்படி வழக்குப் பதிவு செய்து ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், இளஞ்சிறார்கள் ஓட்டும் வாகனத்தின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபராதமாக விதிக்கப்படுகிறது. எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் இளஞ்சிறார்கள், வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் வாகனம் ஓட்டிய இளஞ்சிறார்கள் மீது 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. 158 வாகன உரிமையாளர்கள் மீதும் வழக்கு போடப்பட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 58 ஆயிரத்து 600 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary: If you drive a vehicle under age 18 a fine of Rs 500. Traffic police warn.