தங்கம், வெள்ளி நகைகள், நாணயங்கள் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
இந்த நடவடிக்கையால் ரூபாயின் மதிப்பு சரிவது தடுக்கப்படும் என்று கூறப்பட்டாலும், உள்நாட்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
தங்கத்தின் மீது ஏற்கெனவே 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ‘தங்கத்தின் இறக்குமதி மீது ஏற்கெனவே 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில், 4.35 சதவீதம் வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. ஜனவரி 22-ஆம் தேதியில் இருந்தே இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 14.35 சதவீதம் உயா்ந்துள்ளது.
கடந்த 2021-22 பட்ஜெட்டில் வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. வேளாண் உள்கட்டமைப்பைக்கு நிதிஆதாரத்தைப் அதிகரிக்கும் வகையில் பல்வேறு பொருள்கள், சேவைகள் மீது இந்த கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
ஏற்கெனவே தங்கம், வெள்ளி விலை உச்சத்தில் உள்ள நிலையில், மத்திய அரசு விதித்துள்ள கூடுதல் வரி மூலம் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதும் அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.